நீலகிரி

கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று சாலையில் நின்றுக் கொண்டு அந்தப்பக்கம் வந்த வாகன ஓட்டிகளை ஓட ஓட விரட்டியது. சில வாகன ஓட்டிகள், வாகனத்தைப் போட்டுவிட்டு ஓடினர்.

கூடலூர், முதுமலைப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காடுகளில் கூட பசுமையை காணமுடிவதில்லை. மேலும், மாயார், பாண்டியாறு, ஓவேலி உள்ளிட்ட ஆறுகள் வறண்டுக் கிடப்பதால் காட்டு விலங்குகள் மற்றும் மக்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ஒரு காட்டு யானை சாலையோரம் நின்றுக் கொண்டிருந்தது.

அந்த வழியாக ஏராளமான கார், மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை திடீரென அந்த வாகனங்களை துரத்தியது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சிலர் தங்களது வாகனங்களை வேகமாக ஓட்டிச் சென்றனர். இன்னும் சிலர் வாகனத்தைப் போட்டுவிட்டு ஓடினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டு யானை சிறிது தூரம் வரை வாகனங்களை துரத்தி வந்தது. இதனால் மைசூரில் இருந்து கூடலூர் நோக்கி வந்த வாகனங்களும், கூடலூரில் இருந்து மைசூர் மற்றும் மசினகுடிக்கு சென்ற வாகன ஓட்டிகளும் வந்த வழியாக தங்களது வாகனங்களை திருப்பிச் சென்றனர்.

காட்டு யானை காட்டுப் பகுதிக்குள் சென்ற பிறகு வாகனங்களை இயக்கலாம் என்ற முடிவுக்கு வாகன ஓட்டிகள் வந்தனர். ஆனால், யானை அங்கிருந்து செல்ல விரும்பவில்லை போலும் அங்கேயே இருந்தது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதித்தது. மேலும், வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது.

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு காட்டு யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்றது. அதன்பின்னரே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

காட்டு யானை வாகன ஓட்டிகளை ஓட ஓட விரட்டிய சம்பவத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.