திருவாரூர்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனே நிவாரண தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு வருகிற 17-ஆம் தேதி விவசாயிகள் குடும்பத்துடம் காத்திருப்புப் போராட்டம் நடத்தப் போகிறோம் என்று விவசாய தொழிலாளர் சங்க கூட்டம் அறிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய நிர்வாக குழுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சிவசண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நேதாஜி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இச்சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். சங்க மாவட்டத் தலைவர் வீராச்சாமி பேசினார்.

“வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனே நிவாரண தொகை வழங்க வேண்டும்.

கடந்த ஆறு மாத காலமாக கோட்டூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை. எனவே சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும்” இவ்விரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு வருகிற 17-ஆம் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்தப் போராட்டத்திற்கு கோட்டூர் ஒன்றியத்திலிருந்து ஐந்தாயிரத்தும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொள்வர் என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் செந்தில்நாதன், ஒன்றிய துணைத்தலைவர் தேவதாஸ், மாவட்டக்குழு உறுப்பினர் கணேசன் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.