Whenever rains take place the scientist Seloor Raju ...

மதுரை

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் போதெல்லாம் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிற சமயத்தில் மழை பெய்து குடிநீர் தட்டுப்பாடு தானாக நீங்கி விடுகிறது என்று அணைக்கு தர்மாக்கோல் போட்ட விஞ்ஞானி அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்த ஆய்வு கூட்டம் மாநகராட்சி அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது.

இதில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கிப் பேசினர்.

ஆட்சியர் வீரராகவராவ், ஆணையாளர் சந்தீப் நந்தூரி, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசியது:

“மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் போதெல்லாம் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், அந்த சமயத்தில் மழை பெய்து குடிநீர் தட்டுப்பாடு தானாக நீங்கி விடுகிறது. அதேபோல் இந்தாண்டும், கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

இந்த வறட்சியை சமாளித்து மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

தற்போது வைகை அணையில் 147 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இந்த நீரை வைத்து 12 நாள்களுக்கு மதுரை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்திச் செய்யலாம்.

அதுதவிர, பெரியாறு அணையில் இருந்தும் வைகை அணைக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த நீரை இன்னும் கூடுதலாக 15 நாள்கள் என மொத்தம் மதுரை மக்களுக்கு 27 நாள்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யலாம்.

அதன்பின்னும், மழைப் பெய்யாவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

மதுரையில் குடிநீர் விநியோகத்தைச் சீராக்க ரூ.30 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், மாநகராட்சி இதில் வெறும் ரூ.10 கோடி மட்டும் பெற்றுள்ளது. மீதமுள்ள நிதியைப் பெற சரியானத் திட்டத்தைக் கொடுக்க வேண்டும்.

அதேபோல வெறும் 270 இடங்களில் குடிநீர் தொட்டி வைக்கப்படும் என்று ஆணையாளர் கூறுகிறார். இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே, கூடுதல் குடிநீர் தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுவரை லாரி உரிமையாளர்களிடம் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே, மாநகராட்சி இதில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது தனியார் வாகனங்கள் அதிகளவில் குடிநீர் விற்பனைச் செய்து வருகின்றனர். வறட்சிக் காலத்தில், இவர்களது விற்பனையை முற்றிலும் தடைச் செய்ய வேண்டும். அவர்களிடம் மாநகராட்சி மொத்தமாக நீரைப் பெற்று மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

இதுகுறித்து சட்டப்படி சாத்தியக் கூறுகள் இருக்கிறதா? என்பதனை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியது:

“மதுரை மாநகர மக்களுக்கு தேவையானக் குடிநீர் விநியோகத்தை மாநகராட்சி சீராக செய்ய வேண்டும். மக்களை பொறுத்தவரை குழாய்கள் மூலம் குடிநீர் பெறுவதையே விரும்புகின்றனர். எனவே, தற்போதைய சூழ்நிலையில் குழாய் மூலம் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

அனைத்துப் பகுதி மக்களுக்கும் குடிநீர் சரியாக கிடைக்கிறதா? என்பதனை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.

குழாய் மூலம் வழங்க முடியாத பட்சத்தில் லாரிகள் மூலம் பாகுபாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.