We will not let the ban on beef sale in Tamil Nadu - beef stall sellers
மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு விதித்திருக்கும் தடையை தமிழகத்தில் அமல்படுத்தவிட மாட்டோம் என்று தமிழக மாட்டிறைச்சி வியாபாரிகள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.
இறைச்சிக்காக மாடுகளை விற்பது தடை செய்யப்படுவதாக மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிக்கை மூலம் நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வது உடனடியாக தடை செய்யப்படுகிறது.
இனிமேல், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும். மேலும் கசாப்பு தொழிலுக்காகவோ, இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம், காளை, எருமை மாடு உள்ளிட்ட விலங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த விதிமுறை மூலம், நாடு முழுவதும் உள்ள மாட்டிறைச்சி விற்பனை கூடங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் உள்ள நவீன இறைச்சிக் கூடத்தை மூட வந்த அதிகாரிகள் வியாபாரிகளிம் கடும் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர்.
திருச்சியில் உள்ள நவீன இறைச்சிக் கூடத்தில் நூற்றுக்கணக்கான மாட்டிறைச்சிக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இன்று வழக்கம்போல் வியாபாரிகள் மாடுகளை அறுத்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதையடுத்து அதிகாரிகள் இறைச்சிக் கூடத்தை இழுத்துமூட வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
கடைகளை மூட விட மாட்டோம் என உறுதிபடத் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் கடைகளை மூட முடியாமல் திரும்பிச் சென்றனர். மத்திய அரசின் இந்த சட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம் என இறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர்.
