காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு என்றும் அதனை யாரும் நிர்பந்திக்க முடியாது என்றும் காவிரி மேலாண்மை ஆணைய குழு தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். 

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு என்றும் அதனை யாரும் நிர்பந்திக்க முடியாது என்றும் காவிரி மேலாண்மை ஆணைய குழு தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் காவிரிநீர் ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 22 ஆம் தேதியும், காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 23 ஆம் தேதியும் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்கு முன்பு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வை தொடங்கியுள்ளனர். அதன்படி தமிழக டெல்டா மாவட்டங்களின் நீர் ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையின் நிலவரம் குறித்து காவிரிநீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர், காவிரிநீர் ஒழுங்காற்றுகுழு தலைவர் நவீன்குமார், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அணையின் சுரங்கம், வலதுகரை, கவர்னர்வியூ பாயின்ட், நீர்அளவீட்டு மானி, நிலஅதிர்வு கருவி ஆகியவற்றை பார்வையிட்டனர். அணையின் நீர்இருப்பு, நீர்வரத்து, நீர்திறப்பு குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் அணையின் இடதுகரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆலோசனை நடத்தினர். அப்போது ஓராண்டு நீர்வரத்து, நீர் திறப்பு உள்ளிட்ட புள்ளிவிபரங்கள் குறித்தும், பாசனப்பகுதிக்கு செல்லும் நீர் குறித்தும், முப்போக சாகுபடிக்கு தேவையான நீரின் அளவு குறித்தும் ஆலோசனை நடத்தினர். இதேபோல் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர் அணைய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நீர் அணையத்தின் அளவீட்டு மையம் இயங்கி வருகிறது. நேற்று மாலை காவிரி மேலாண்மை ஆணைய குழுவினர் இங்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

ஆணையத்தின தலைவர் ஹல்தர் தலைமையில் காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன் குமார், இயக்குனர் மோகன முரளி, மத்திய நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் கோபுலம் ராமகிருஷ்ணா ரெட்டி, மேட்டூர் அணை செயற்பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அங்குள்ள அளவீட்டு மைய செயல்பாடுகள், அளவீட்டு புள்ளி விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் மத்திய நீர் ஆணைய அலுவலகத்திலும் ஆய்வு நடத்தப்பட்டு அங்கிருந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த குழுவினர் மாலை கல்லணையில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த குழுவின் தலைவர், ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேகதாது குறித்து கண்டிப்பாக விவாதிப்போம். மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு குழு அதிகாரம் உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை என்று தெரிவித்தார்.