தூத்துக்குடி துறைமுகத்துக்கு விசாகப்பட்டிணத்தில் இருந்து ஐ.என்.எஸ். ரஞ்சித், கோரா என இரண்டு போர்க்கப்பல்கள் வருகை தந்துள்ளன. இந்த போர்க் கப்பல்களை பள்ளி மாணவர்கள் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானை வெற்றி கொண்டதன் நினைவாக, கப்பல் படை தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 4 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கப்பல் படை சார்பில் பொதுமக்கள் போர்கப்பல்களை பார்வையிடவும், அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கப்பல்கள் படை தினத்தை முன்னிட்டு, கப்பல் படையின் கிழக்கு பிராந்தியத்தில் இருந்து ஐ.என்.எஸ். ரஞ்சித், ஐ.என்.எஸ். கோரா கப்பலை பார்வையிட அனுமதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தென் மாவட்டங்களில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள், தேசிய மாணவர் படை பிரிவினர் இந்த கப்பல்களை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். கப்பலில் நவீன குறிப்பிட்ட இலக்கினை தாக்கும் ஏவுகணை, வானில் தாக்கும் ஏவுகணைகள், தண்ணீரில் உள்ள நீர் மூழ்கிக் கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகள், மூன்று வகையான ஏவுகணைகள் உள்ளன. எதிரிகளிடம் இருந்து வரும் ஏவுகணைகளை திசை திருப்பும் வகையிலான ஏவுகணைகள் உள்ளன. மேலும், போர்க் கப்பலின் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும் அப்போது விளக்கப்பட்டன.
இது குறித்த, ரஞ்சித் கப்பல் கேப்டன் பிரசாந்த் சவுத்திரி கூறும்போது, கப்படை படை தினத்தை முன்னிட்டு முன்கூட்டியே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடிக்கு போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளன. மாணவர்களிடையே தேசப்பற்றினையும் கப்பல் படையில் சேர்வதற்கான ஆர்வத்தினை தூண்டும் விதமாக இந்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
