voting process begins at rk nagar polling booths
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடக்கிறது என்றாலும், காலையிலேயே மக்கள் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளில் நின்று வாக்களித்தனர்.
இதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் அதிகபட்ச காவலர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர், நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
இத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்பட 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.
ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 1,10,903, பெண் வாக்காளர்கள் 1,17,232, மூன்றாம் பாலினத்தவர் 99 பேர் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 50 மையங்களில் 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச் சாவடிகளும் பதற்றமானவையாகக்ண்டறியப்பட்டுள்ளதால், 258 வாக்குச் சாவடிகளுக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மேற்பார்வையில் பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
