திருவொற்றியூர் 5 மற்றும் 12வது வார்டில் வாக்குப் பதிவு செய்யும் இயந்திரம் பழுதானதால் அங்கு வாக்காளர்கள் நெடுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
திருவொற்றியூர் 5 மற்றும் 12வது வார்டில் வாக்குப் பதிவு செய்யும் இயந்திரம் பழுதானதால் அங்கு வாக்காளர்கள் நெடுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை 12வது வார்டிற்குட்பட்ட பாகம் எண் 220 என்ற பூத்தில் வாக் பதிவு செய்யும் இயந்திரம் பழுதானதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது. பேலட் யூனிட் கண்ட்ரோலர் என்று சொல்லக்கூடிய இயந்திரத்தில் காலை நேரத்திற்குப் பதிலாக முதல் நாள் 18 ஆம் தேதி இரவு நேரத்தை காட்டுவதால் அதனை மாற்றுவதாக கூறி சிறிது நேரம் மாற்று இயந்திரத்தை மாற்றினர். ஆனால் அந்த இயந்திரம் பழுதடைந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மூன்றாவதாக கொண்டு வந்த இயந்திரத்தில் பேட்டரி பாதிப்பு இருப்பதனால் அதனையும் மாற்றி மீண்டும் பழைய இயந்திரத்தை பொருத்தி வாக்குகளை பதிவு செய்வதற்கு வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த குளறுபடியால் வாக்களிக்க வந்த மக்கள் நெடுநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. 135 வாக்குகள் செலுத்தப்பட்ட நிலையில் தேர்தல் அதிகாரிகள் புதிய இயந்திரங்களை வரவழைப்பதற்காக ஏற்பாடுகளை செய்தனர்.

அதேபோன்று எண்ணுர் பகுதியில் ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட வாக்குச் சாவடியில் உள்ள 75வது பூத்தில் வாக்கு பதிவு செய்யும் இயந்திரம் பழுதடைந்ததால் ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது. அங்கு வாக்குகளை பதிவு செய்யும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் புதிய வாக்கு பதிவு செய்யும் இயந்திரம் வரும்வரை வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்வதை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைத்தனர். இதனிடையே தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்காக போன் செய்தால் போன் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பல இடங்களில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
