காஞ்சிபுரம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இசைக் குழுவினரின் மேள தாளங்களுக்கும், பேண்டு வாத்தியங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமானி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் அதிமானி தலைமையில், காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில், ஏடிஎஸ்பி-க்கள் வீரமணி, முகிலன், உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் அதிமானி கூறியது:

“விநாயகர் சதுர்த்தி விழாவை எவ்வித சலசலப்பும் இல்லாமல் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதற்கு விழாக் குழுவினர்கள் காவலாளர்கள் அறிவுறுத்தலை மீறாத வண்ணம் விதிகளை கடைப்பிடித்தல் அவசியமாகும்.

குறிப்பாக, ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் முன் அனுமதியின்றி மாற்றக் கூடாது. மாலை 6 மணிக்கு மேல் சிலையை கரைக்க அனுமதி இல்லை.

பன்னிரெண்டு அடி உயரத்துக்கு மேல் சிலை மற்றும் பீடம் இருக்கக் கூடாது. ரசாயன கலவையில் வண்ணம் தீட்டிய விநாயகர் சிலைகளை கரைக்கக் கூடாது. கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இசைக் குழுவினரின் மேள தாளங்களுக்கும், பேண்டு வாத்தியங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊர்வலத்தின்போது பிற மத வழிபாட்டுத் தலங்களை கடக்கும்போது அவர்களின் மனம் புண்படும்படி கோஷங்களோ, சைகைகளோ செய்யக் கூடாது.

இதுபோல் காவலாளர்கள் வகுத்துள்ள அனைத்து விதிமுறைகளையும், முறையாக கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

இதில், டிஎஸ்பி-க்கள், சிலம்பரசன், மதிவாணன், ராஜேந்திரன், எட்வர்டு, தென்னரசு, கண்ணப்பன், சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.