ஈரோடு

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது. எனவே கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களுடைய போராட்டதை கைவிட வேண்டும்” என்று ஈரோட்டில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஈரோடு மாவட்டம், பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று நடைப்பெற்றது.

இதில் பங்கேற்க வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியது:

‘‘நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது. எனவே கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களுடைய போராட்டதை கைவிட வேண்டும்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி இயற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தள்ளுபடி செய்யப்படாமல் நிலுவையில் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

அதன்பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அவற்றைப் பார்வையிட்ட பின்னர் தம்பிதுறை பேசியது:

“தமிழக மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேர்வு மட்டுமின்றி, உலக அளவில் எந்த தேர்விலும் சாதிக்கும் திறனை வளர்க்கும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாநில பட்டியலில் கல்வி வரவேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கையாகும். ஆனால், இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது கல்வியை பொதுப் பட்டியலில் சேர்த்தார்.

நீட் தேர்வு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தேர்வு திடீரென கொண்டு வரப்பட்டதால் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வு தேவையில்லை என்பதே அதிமுக-வுக்கும், தமிழக அரசுக்கும் கொள்கையாக உள்ளது. ஆனால், அரசியல் கட்சியினர் தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

குஜராத், மேற்கு வங்காளம், கர்நாடகம், மராட்டியம் ஆகிய வெளி மாநிலங்களிலும் நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர்” என்று அவர் பேசினார்.

இந்த கண்காட்சியில் எம்.ஜி.ஆர். முக்கியப் பிரமுகருடன் உள்ள புகைப்படங்கள், காய்கறி, பழங்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலைகள், எம்.ஜி.ஆரின் உருவப்படம் வரையப்பட்ட தர்பூசணிகள், காய்கறிகளால் உருவாக்கப்பட்ட மயில் போன்றன இடம் பெற்றிருந்தன.

இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், ஓ.எஸ்.மணியன், கடம்பூர்ராஜூ, சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், எஸ்.செல்வகுமார சின்னையன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், வி.பி.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.