Asianet News TamilAsianet News Tamil

மோசடி செய்துவிட்டு சிறைக்கு செல்லாமல் ஏமாற்றிவந்த வி.ஏ.ஒ; தேடப்படுவதை அறிந்து நீதிமன்றத்தில் சரண்...

VAO cheated government fund and not go to jail is surrender to court
VAO cheated government fund and not go to jail is surrender to court
Author
First Published Jun 5, 2018, 9:11 AM IST


காஞ்சிபுரம்

அரசு நிதியை மோசடி செய்த முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு காவலாளர்களால் தேடப்படுவதை அறிந்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த முகலவாடி பகுதியில் கிராம நிர்வாக அதிகாரிகளாக இருந்த துரைகண்ணு (60), கலையரசன் (61), மதுராந்தகம் வட்ட வருவாய் ஆய்வாளராக இருந்த தேவராஜ் (71), முகலவாடி தலையாரியாக இருந்த முருகேசன் ஆகிய நால்வரும் சேர்ந்து போலியான சான்றிதழ்கள் தயாரித்து ரூ.20 ஆயிரம் அரசு நிதி மோசடியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி காஞ்சிபுரம் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையின் அடிப்படையில் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் 2009-ஆம் ஆண்டு இவர்கள் நால்வருக்கும் தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தது.

அபராத தொகையை மட்டும் கட்டிய நால்வரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதற்கிடையில் 2010-ல் தலையாரி முருகேசன் இறந்துவிட்டார். இதனால் அவர் மீது இருந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மற்ற மூவருக்கும் தண்டனையை குறைத்து தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் கட்ட உத்தரவிட்டது.

ஆனால், அதன்பிறகு மூவரும் சிறைக்கு செல்லாமல் தலைமறைவானார்கள். காஞ்சிபுரம் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் அவர்களை தீவிரமாக தேடிவந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேவராஜ் மற்றும் கலையரசன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்த மதுராந்தகம் அடுத்த ராமபுரத்தை சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அதிகாரியான துரைகண்ணுவை காஞ்சிபுரம் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த நிலையில், அவர் நேற்று காலை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே விதித்த ஒரு ஆண்டு சிறை தண்டனையை அவர் அனுபவிக்கும்படி நீதிபதி கீதாராணி உத்தரவிட்டார். 

இதனையடுத்து காஞ்சிபுரம் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள், துரைகண்ணுவை புழல் சிறையில் அடைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios