தமிழ் மொழி பாடம் என்ற விதியை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள வைரமுத்து, தமிழ் பேச்சு மொழியாகிவிடும் என்ற பேராபத்திலிருந்து காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
பேச்சு மொழியாகும் தமிழ்
நவீன காலத்திற்கு ஏற்ப இன்றைய தலைமுறை தாய் மொழியான தமிழ் மொழியை மறந்து ஆங்கில மொழி மீது நாட்டம் அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளிலும் தமிழ் பாடங்கள் இல்லாத நிலை நீடித்து வருகிறது. இதனால் தமிழ் மொழியானது பேச்சு மொழியாகும் நிலை நீடித்து வருகிறது. 10 ஆம் வகுப்பு பள்ளியில் படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் வார்த்தைகளை எழுத்து கூட்டி கூட படிக்க முடியாத நிலை தான் நீடிக்கிறது. இதனால் தமிழ் மொழியானது மெல்ல, மெல்ல பேச்சு மொழியாக மாறி வருகிறது. இதனை அறிந்த தமிழக அரசு சிபிஎஸ்சி உள்ளின்ன அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடம் மற்றும் தேர்வு கட்டாயம் என்று அறிவித்துள்ளது.

பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம்
இது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்ட சுற்றிக்கையில், தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி 2022–23-ம் கல்வியாண்டில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் வரும் 2023–24-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு வரையும், 2024–25-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு வரையும் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. இது மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட அனைத்துவித பள்ளிகளுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது.

ஓட்டையாக அல்ல சாட்டையாக இருக்கவேண்டும் சட்டம்
மாணவர்கள் பொதுத்தேர்விலும் தமிழை ஒரு தேர்வாக கட்டாயம் எழுத வேண்டும். இதற்கான அனைத்துவித தனியார் பள்ளிகளும், தமிழில் தகுதியான ஆசிரியர்களாக பணியமர்த்தி, மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கட்டாயம் கற்றுத் தர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட கவிஞர் வைரமுத்து,
பத்தாம் வகுப்புவரை தமிழ் கட்டாயப் பாடம் என்ற விதியை அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும். ஓட்டையாக அல்ல சாட்டையாக இருக்கவேண்டும் சட்டம். எச்சரிக்க வேண்டும் அரசு. ஒத்துழைக்க வேண்டும் நிர்வாகம். பேச்சு மொழியாகிவிடும் பேராபத்திலிருந்து தமிழைக் காக்க வேண்டும் தமிழர்களே! என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
கோட் சூட்டில் முதல்வர்... சிங்கப்பூர் தொழில் அதிபர்களோடு இணைந்து கெத்து காட்டும் ஸ்டாலின்
