நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு நாளான பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு தர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்குபதிவு அன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் பிடித்தம், சம்பள குறைப்பு இருக்க கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியான முதலே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளன.
இதனையடுத்து, வாக்குப்பதிவு நடைபெறும் நாளான பிப்.19-ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ‘நகர்ப்புற தேர்தல் வாக்குப்பதிவு அன்று வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு தர வேண்டுமென்றும், வாக்குப்பதிவு அன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு சம்பள பிடித்தம் சம்பளக் குறைப்பு இருக்கக்கூடாது என்றும், உத்தரவை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.’ என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக, மாநில தேர்தல் ஆணையம் அண்மையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி, வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள 20 நபர்கள் வரை அனுமதி, திறந்தவெளி மைதானங்களில் 1,000 நபர்கள் வரையும் அல்லது மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 50% என இதில் எது குறைவான எண்ணிக்கையோ அந்த அளவில் பரப்புரை கூட்டம் நடத்த அனுமதி, கொரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்டவை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பிரசாரம் செய்யும் நேரத்தை அதிகரித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் பிரசாரத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதல் நேரம் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
வருகிற 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூடமாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள், ஒயின், பீர் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது டாஸ்மாக் பார் திறப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.
