சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகரித்தப்படியே உள்ளது. ஆண்களை விட பெண்கள், சிறுவர்களின் கூட்டம் அதிகளவில் உள்ளது.
ஆங்காங்கே வெயிலில் உட்கார்ந்து இருக்கும் பெண்கள், முதியோர், கல்லூரி மாணவிகள் ஆகியோருக்கு பழ வகைகள், வாட்டர் பாட்டில்கள், பிஸ்கெட் ஆகியவை கொடுக்கின்றனர். இரவு முழுவதும் பனியில் இருப்பவர்களுக்கு தலைவலி தைலம், வெயிலில் சூடு தாங்குவதற்காக தேங்காய் எண்ணெய் பாக்கெட் ஆகியவையும் கொடுத்து வருகின்றனர்.

யார் தலைமையும் இல்லாமல் நடக்கும் இந்த போராட்டத்தில், தமிழை பற்றியும், தமிழர்களின் பண்பாடு பற்றியும், தமிழர்களின் உணவுகள் குறித்து பேச யார் வந்தாலும், அவர்களிடம் ‘மைக்‘கை கொடுத்து பேச அழைக்கின்றனர்.
இன்று ஞாயிறு விடுமுறை என்பதால், சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் காலை முதலே மெரினாவில் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கைக் குழந்தைகளை தூக்கி கொண்டு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மெரினாவுக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், கண்காணிப்பு கேமரா கொண்ட ஆளில்லா விமானம், மெரினா கடற்கரையை சுற்றி சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. அதை யார் இயக்குகிறார்கள், கண்காணிக்கிறார்கள் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக ஆளில்லா விமானம் இயக்கினால், நல்லதாக அமையும். ஆனால், அறப்போராட்டத்தில் உள்ள மாணவர்களும், இளைஞர்களும் அதை கண்டு அஞ்சவில்லை. தங்களது போராட்டம் இதன்மூலம் அதிகமாகும் என கூறி, தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
