தமிழ்நாடு மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்: ராஜ்நாத் சிங் உறுதி!
தமிழ்நாடு மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத பெருமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக அதிகமான மழைப்பொழிவை சந்தித்தன. இதன் காரணமாக, இந்த 4 மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.
இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு சேதங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தார். மிக்ஜாம் புயல் மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த ராஜ்நாத் சிங், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தின்பொது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர்.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தேன். முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: பிரதமர் மோடிக்கு பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் பாராட்டு!
தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணத்திற்கு ரூ.450 கோடி மட்டுமின்றி, சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்கும் மத்திய அரசு ரூ.561 கோடி நிதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து செய்யப்படும். புயல், மழை பாதிப்பில் இருந்து தமிழ்நாடு மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.” என்றார்.
அதேபோல், முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், “சென்னை மழை, வெள்ளப் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசின் குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது. அனைத்துப் பகுதிகளையும் இயல்பு நிலைக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மனுவாக அளித்துள்ளேன். நிவாரண பணியை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5060 கோடி வழங்கக் கேட்டுக் கொண்டேன். தமிழ்நாடு அரசின் கோரிக்கையைப் பரிசீலித்து உரிய நிவாரண நிதி வழங்க ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டேன்.” என தெரிவித்துள்ளார்.