மேட்டூர் அணையும் மக்களின் தியாகமும் என்ற தலைப்பில் முகநூளில் ஒரு பதிவு கிடைத்தது. அந்த பதிவில் மேட்டூர் அணையை பற்றிய சுவாரஸ்ய தகவல்களும், பிரமிக்கவைக்கும் சில உண்மையும் கூறப்பட்டுள்ளது.  

இதோ அந்த பதிவு; வெள்ளையர்கள் இங்கு அணைகள் கட்டியதற்கு முக்கியமான அரசியல் காரணம் இருந்தது. உலகை பங்கிட்டுக் கொள்ளுவதற்காக ஏகாதிபத்திய நாடுகளிடையே ஏற்பட்ட மோதல்களே இரண்டு உலக யுத்தங்கள். இந்த யுத்தங்களை உருவாக்குவதில் மையப்புள்ளியாக அன்று இருந்தது இங்கிலாந்து. இந்திய மக்களுக்கும் உலக யுத்தத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.ஆனால் இந்திய மக்கள் மீது யுத்தம் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது.

மாட்டுக்கு புல் போடுவது மாடுகளின் மீதான கருணையா? நிறைய பால் கறக்க வேண்டும் என்ற தேவையா? இந்த முறையில் தான் உருவானது தான் இந்திய அணைகள். யுத்தங்களினால் ஏற்படும் இழப்பை சரி செய்யவும், புதிய வருமானங்களை உருவாக்கி மேலும் யுத்தம் நடத்தி பல நாடுகளைப் பிடிக்க வேண்டும் என்ற தேவையும் இங்கிலாந்திற்கு இருந்தது.கொள்ளையும்,கொலையும் நடத்த வந்தவனுக்கு வீட்டுக்காரனின் நல்வாழ்வு மீதான அக்கறை என்றெல்லாம் புல்லரித்துப் பேசுவோர் உண்டு.

காவிரியைத் தடுத்து அணை கட்ட வேண்டும் என்ற திட்டத்தை முதலில் 1828 ல் ஆராய்ந்தவர் பொறியாளர் ஆர்தர் காட்டன். 1856 ல் மேஜர் லாபோர்டு என்பவர் ஒரு திட்டத்தை உருவாக்கினார்.இருந்தாலும் ஆர்தர் காட்டன் உருவாக்கிய திட்டத்துக்கு 1910 ல் அரசு ஒப்புதல் வழங்கி 3 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் 1925 ல் அடிக்கல் நாட்டப்பட்டதே மேட்டூர் அணைத் திட்டம்.

அணை கட்டிவிடலாம்.நீர் எப்படி பெறுவது?அதற்கான ஒப்பந்தம் உருவானது.கிருஷ்ணராஜ சாகர் எனும் கன்னம்பாடி அணையின் அன்றைய உயரம் 80 அடி.11 ஆயிரம் மில்லியன் கன அடி கொள்ளவு.அதை 124 அடியாகவும்,41 ஆயிரத்து 500 கன அடி கொள்ளவாகவும் மாற்ற மைசூர் அரசு பிரிட்டிஷ் அரசிடம் விண்ணப்பம் போட்டிருந்தது.இதை ஏற்றுக்கொண்டு 3 லட்சத்து 1000 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் மேட்டூர் அணை கட்ட மைசூர்-,சென்னை மாகாணங்கள் ஒப்பந்தம் போட்டன.

அணை கட்ட நிலம் கையகப்படுத்தும் பணி அடுத்து தொடங்கியது.ஆண்டாண்டு காலமாக பிறந்து,வளர்ந்து,வாழ்ந்த மக்கள்,பொதுத் தேவையெனக் கருதி, இடத்தை விட்டு அநாதைகளாக வெளியேறினார்கள். கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் அளவு 18 லட்சத்து 43 ஆயிரத்து 584 ஏக்கர். காலி செய்த வீடுகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 146. 21 கிராமங்கள் முற்றிலுமாக காலி செய்யப்பட்டது. இழப்பீட்டு தொகை 29 லட்சத்து 66 ஆயிரத்து 284 ரூபாய். கையகப்படுத்தப்பட்ட நிலத்தோடு இழப்பீட்டு தொகையை ஒப்பிட்டுப் பாருங்கள்.ஒரு ஏக்கருக்கு ஒரு ரூபாய் 50 காசு தான். எத்தகைய பெரிய தியாகம் இது.வளர்ச்சி என்ற வல்லூறுகளின் குரலுக்கு பின்னால் வாழ்விழந்து நின்றது ஏழை மக்களே.

1895 ல் கட்டப்பட்ட முல்லை பெரியாரும்,1910 ல் கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகரும்,ஆயிரக்கணக்கான உழைப்பாளர்களும் உருவாக்கி கொடுத்த அனுபவத்தின் புதுமை தான் மேட்டூர் அணையின் பிறப்பு.1800 குடிசைகள் அமைத்து, 11 ஆயிரத்து 800 பேர் நாளொன்றுக்கு உழைத்து, ஆண்களுக்கு 7 அணாவும்,பெண்களுக்கு 4 அணாவும் கூலியாகக் கொடுத்து உருவாக்கப்பட்டது. பொங்கி வரும் வெள்ளத்தில் அணை கட்டுவது அவ்வளவு எளிதானதல்ல. 1930 ல் அமராவதியில் பெருக்கெடுத்த வெள்ளம் அணையின் ஒரு பகுதியை அடித்துச் சென்றது.

எத்தனை பேர் இறந்தார்கள் என்ற விபரம் இதுவரை இல்லை.ஆனால் இறந்த எண்ணிக்கை மறைக்கப்பட்டதை ஒரு செய்தி உறுதிப்படுத்துகிறது. அணை கட்டிய காலத்தில் 23 ஆயிரத்து 804 பேர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றதாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.கட்டுமானப் பணியின் போது அங்கு மலேரியா பரவியது. மொத்த தொழிலாளர்களில் 25% பேர் பாதிக்கப்பட்டார்கள்.

இவ்வளவு வலி வேதனைகளைத் தாங்கி 1934 ஆகஸ்ட் 21 ம் தேதி அன்றைய சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லி என்பவரால் அணை திறக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணைக்கு ஒதுக்கிய நிதி 7 கோடியே 37 லட்சம். செலவான தொகை 6 கோடியே 67 லட்சம்.ஒதுக்கீட்டில் மிச்சம் 70 லட்சம். இன்று இப்படி ஒரு கணக்கை கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?

அணை வந்தது.நீர் வந்தது.அடுத்தடுத்து அனைத்தும் வந்தது. அணை கட்ட ஒதுக்கிய நிலத்தில் 229 ஏக்கர் நிலத்தை 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து பிரிட்டன் மான்செஸ்டரை மையமாகக் கொண்டு உலகப் புகழ் பெற்ற பியர்ட்செல் கம்பெனி 1937 ல் துணி ஆலையை தொடங்கியது. ஆடை பற்றாக்குறை இருந்த அந்தக் காலத்தில் ஒரு நாளைக்கு 8 ஆயிரம் கிலோ பஞ்சைப் பயன்படுத்தி 50 மீட்டர் நூலிழைகள் உற்பத்தி செய்யப்பட்டன.

நாளொன்றுக்கு 5 டன் காஸ்டிக் உப்பு தயாரித்த மேட்டூர் கெமிக்கல்ஸ் 1941 ல் தனது உற்பத்தியைத் தொடங்கியது. 1950 ல் மெட்ராஸ் அலுமினியம் கம்பெனி தொடங்கப்பட்டது.இவை அனைத்தும் வருவதற்கான மின் தேவைக்காகத்தான் 1937 ல் 47 லட்சத்து 60 ஆயிரத்து 100 ரூபாய் செலவில் மேட்டூர் நீர் மின் நிலையம் தொடங்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்களின் தியாகத்தால்,உழைப்பால் உருவானதே மேட்டூர் அணையும், அதையொட்டிய அடுத்தடுத்த வளர்ச்சியும்.இந்த திட்டங்களின் அரசியல் நோக்கம் அன்று வேறாக இருந்தாலும் அம்மக்கள் அன்று எவரும் எதிர்க்கவில்லை. எட்டு வழிச்சாலை போட முயலும் எத்தர்களே உங்களுக்கான அரசியல் எது என்பதை எல்லோரும் அறிவார்கள். இங்கிருக்கும் இரும்புப் படிமங்களை ஜப்பானுக்கும் தென் கொரியாவிறகும் கடத்தி விற்கும் நோக்கம் ஒன்றைத் தவிர வேறென்ன? இப்படி முகநூலில் பிரமிக்க வைக்கும் ஒரு பதிவு உலா வருகிறது.