வேலூர்
 
வேலூரில் பெரியார் சிலையை உடைத்த பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உடைக்கப்பட்ட பெரியார் சிலை மற்றும் வேலூரில் உள்ள அனைத்து பெரியார் சிலைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 25 ஆண்டுகளாக அங்கு ஆட்சி செய்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி படுதோல்வியடைந்தது.  அங்கு வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

சில இடங்களில் அவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தெற்கு திரிபுரா மாவட்டத்தில் பெலோனியா என்ற நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சோவியத் யூனியன் நாட்டை சேர்ந்த புரட்சியாளரும், கம்யூனிஸ்டு தலைவருமான லெனினின் சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலையை பாஜகவினர் அகற்றியதால் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில் இன்று திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழ்நாட்டில் ஈ.வே.ரா.சிலை என குறிப்பிடப்பட்டிருந்தார். 

பெரியார் சிலை அகற்றப்படும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் டிவிட்டர் பதிவு இருந்ததால் தமிழகத்தின் பல்வேறு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலையை அந்த கட்சியை சேர்ந்த ஒன்றிய, நகர பொதுச் செயலாளர் முத்துராமன் மற்றும் பிரான்சிஸ் ஆகிய இருவர் உடைத்து சேதம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவலாளர்கள் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட முத்துராமன் மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் மீது தகாத வார்த்தைகளால் திட்டுதல், சிலையை சேதம் செய்தது, மிரட்டுதல், பொது சொத்தை சேதம் செய்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து பா.ஜ.கட்சியின் ஒன்றிய, நகர பொதுச்செயலாளர் முத்துராமனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவிப்பு வெளியிட்டார். 

அதேபோல கைதான மற்றொருவரான பிரான்சிஸ் இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகி என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரான்சிஸ் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர் இல்லை என அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.நந்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் அருகில் உடைக்கப்பட்ட பெரியார் சிலை, வாணியம்பாடி பிரதான சாலையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டது. 

இதே போல மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலைகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.