விருதுநகர்

சாத்தூரில் தனியார் சாராயக் கூடத்தில் (பாரில்) முறைகேடாக சாராயம் விற்பனை செய்த இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். தலைமறைவாகிய சாராயக் கூடத்தின் உரிமையாளர்கள் இருவரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தானம் மற்றும் ராஜசேகர் ஆகியோருக்குச் செந்தமான சாராயக் கூடம் ஒன்றுள்ளது.

இதில், காலை 6 மணி முதலே முறைகேடாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக, வெம்பக்கோட்டை காவலாளர்களிடம் யாரோ ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

அதன்படி, வெம்பக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர் ஐயனார் மற்றும் காவலாளர்கள் அந்த தனியார் சாராயக் கூடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அக்கூடத்திலிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சாராய பாட்டில்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், அங்கு வேலைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (41), வேல்ராஜ் (67) ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

இதற்கிடையில் சாராயக் கூட உரிமையாளர்களான சந்தானம், ராஜசேகர் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் இருவரையும் காவலாளர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.