two arrested for having country bombs

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் நாட்டுவெடிகுண்டுகளுடன் இரண்டு பேர் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இவ்வழக்கில் 2 பேரை கைது செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த இருவரும் மணிமங்கலத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். 

மற்றொரு கொலையை நிகழ்த்தவே இருவரும் நாட்டுவெடிகுண்டுகளை வாங்கி அதனை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 

நாட்டு வெடிகுண்டுகள் எங்கிருந்து வாங்கப்பட்டன? யாரை கொலை செய்யத் திட்டம் என்பதை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருந்த குடியிருப்பில் நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டிருப்பது கேளம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.