ttv no ops Chief Ministers position Thanathadamizhalelvan Vilasal

டிடிவி தினகரன் இல்லையென்றால் ஓபிஎஸ் 3 முறை முதல்வராக பதவியேற்றிருக்க முடியாது என எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், துணைப் பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது கட்சியின் சட்ட விரோதம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு, டிடிவி அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்ஏ. வெற்றிவேல், பிரமாணப் பத்திரத்தில் திருத்தம் செய்வதற்காக தலைமைக் கழக நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற்றதாக தெரிவதாகவும், அவ்வாறு செய்தாலும் சசிகலா, தினகரனை நீக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினரோ, எடப்பாடி அணி பாதி தூரம் கடந்துள்ளது என்றும் இன்னும் பாதி தூரம் கடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த நிலையில், ஓ.பி.எஸ். அணியினர், தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமனம் செல்லாது என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளதாக தெரிவித்தார். 

ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள மனுவிற்கு வலுசேர்க்கும் வகையில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ்செல்வன், டிடிவி தினகரன் இல்லையென்றால் ஓபிஎஸ் 3 முறை முதல்வராக பதவியேற்றிருக்க முடியாது என தெரிவித்தார். 

மேலும் ஓ.பன்னீர்செல்வம் அணியின் செயலுக்கு காலம் பதில் சொல்லும் எனவும் எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.