Try to grab the house for debt Appeal to the victim woman ...

நாமக்கல்

நாமக்கல்லில், பெற்ற கடனை வட்டியுடன் திருப்பி தர முற்பட்டும், வீட்டை அபகரிக்கும் முயற்சியில் கடன் கொடுத்தவர் செயல்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் முறையிட்டு மனு கொடுத்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த கண்ணையன் என்பவரது மனைவி ஜோதிலட்சுமி. இவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் நேற்று மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், "நானும் எனது கணவரும் விசைத்தறித் தொழிலாளர்கள். என் மகள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 684 சதுரஅடி பரப்பளவுள்ள கூரை வீட்டை கிரயம் வாங்கி அதில் வசித்து வருகிறோம்.

கணவருக்கு உடல்நிலை மோசமானதால், சடையம்பாளையத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் மோகன் மற்றும் ஓலப்பாளையத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் கோவிந்தராஜ் ஆகியோரிடம் ஒன்றரை இலட்ச ரூபாயை மருத்துவச் செலவுக்காகக் கடன் வாங்கினோம். இந்த கடனுக்காக எங்கள் வீட்டை மோகனின் பெயருக்கு கிரயப் பத்திரம் ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

கடந்த 7-ஆம் தேதி கிரய ஒப்பந்த பத்திரத்தின் வாய்தா முடிந்து விட்டதாகவும், மீண்டும் அதை புதுப்பிக்க வேண்டும் எனவும் மோகன் தெரிவித்தார்.

இதையடுத்து அசல் மற்றும் வட்டி பணத்துடன் ரூ. 1.59 இலட்சம் ஏற்பாடு செய்து பத்திரப் பதிவை இரத்து செய்துகொள்ள மோகனிடம் தெரிவித்தோம். ஆனால், எங்களின் வீட்டை அபகரிக்கும் நோக்கில் மோகன் பத்திரப் பதிவை இரத்து செய்ய மறுக்கிறார்.

எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எனது வீட்டுப் பத்திரத்தை மீட்டுத்தர வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஜோதிலட்சுமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.