Truck crash kills nanaparkal pankerruvittu returned home funerals ...
வி.கைகாட்டி அருகே தாத்தாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு இருசக்கரவாகனத்தில் வீடு திரும்பிய பேரன், லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன்வந்த நண்பர் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், பொட்டக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி மகன் அன்புமணி (27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவர், உயிரிழந்த தனது தாத்தா இலட்சுமணனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புதன்கிழமை 12 மணிக்கு அரியலூர் வந்துள்ளார். நள்ளிரவு என்பதால், அங்கிருந்து பொட்டக்கொல்லைக்கு பேருந்து வசதி ஏதும் இல்லை.
இதனையடுத்து அன்புமணி தனது நண்பர் ரா.வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அரியலூருக்கு வந்த வேல்முருகன் தனது இருசக்கர வாகனத்தில் அன்புமணியை அழைத்துக் கொண்டு பொட்டக்கொல்லைக்கு புறப்பட்டார்.
வி.கைகாட்டி அருகே விளாங்குடி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது எதிரே சீர்காழியிலிருந்து வி.கைகாட்டிக்கு சிமென்ட் ஏற்றிவந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், அன்புமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில், காயமடைந்த வேல்முருகன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கயர்லாபாத் காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், லாரி ஓட்டுநர் சீர்காழி ராஜ்மோகனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
