திருச்சி புதுப்பட்டியில் சீறிப்பாய்ந்தன காளைகள்….மாடுபிடி வீரர்கள் உற்சாகம்…
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புதுப்பட்டி புனித அந்தோணியார் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது, இதில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.கடந்த 2 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தடை காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
ஆனால் இந்த ஆண்டு எப்படியாவது ஜல்லிக்கட்டு நடத்தி விட வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் கடந்த 16 ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
புதுப்பட்டியில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவது என முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கட்டது.
இந்நிலையில் புதுப்பட்டி புனித அந்தோணியார் கோவில் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டு 100 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் உற்சாகத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அறவழிப்போராட்டம் பெரு வெற்றி பெற்றுள்ளது.
