Trichy - Karur passenger stretching up to Salem - Long lasting demand of people fulfilled ...

நாமக்கல்

மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சி - சேலம் பயணிகள் இரயில் சேவையை சேலம் இரயில்வே கோட்டம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தில் இருந்து திருச்சிக்கு நாமக்கல் வழியாக பயணிகள் இரயில் இயக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலித்த சேலம் இரயில்வே கோட்டம் திருச்சி - கரூர் பயணிகள் இரயிலை சேலம் வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த இரயில் நேற்று முதல் சோதனை முறையில் மூன்று மாதங்களுக்கு இயக்கப்பட உள்ளது. பயணிகளின் கூட்டத்தைப் பொறுத்து தொடர்ந்து இயக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று திருச்சியில் இருந்து இயக்கப்பட்ட புதிய சிறப்பு இரயில் மதியம் 12.40 மணிக்கு நாமக்கல் வந்தது. இந்த இரயிலுக்கு பி.ஆர்.சுந்தரம் எம்.பி. தலைமையிலும், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையிலும் அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

இதில், நாமக்கல் நகராட்சி பொறியியலாளர் கமலநாதன், நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேகர் மற்றும் முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்தச் சிறப்பு இரயில் நாள்தோறும் திருச்சியில் காலை 9.35 மணிக்கு புறப்பட்டு கரூருக்கு 11.35 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் அங்கிருந்து 11.40 மணிக்கு புறப்பட்டு, பகல் 1.20 மணிக்கு சேலம் சென்று சேரும்.

அதேபோல, சேலம் - கரூர் சிறப்பு பயணிகள் இரயில், சேலத்தில் இருந்து 1.30 மணிக்கு புறப்பட்டு, 3.20 மணிக்கு கரூர் செல்கிறது. பின்னர் அங்கிருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு திருச்சி சென்றடைகிறது என்று இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் இந்த இரயிலுக்கு நாமக்கல் மாவட்ட நுழைவு வாயிலான மோகனூர் இரயில் நிலையத்திலும் மோகனூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கருமண்ணன் தலைமையில் வரவேற்பு கொடுத்து, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மோகனூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் புரட்சிபாலு, நகர துணைச் செயலாளர் சிவஞானம், பொருளாளர் தாவீது, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன், கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் கார்த்தி,

மாவட்ட மாணவர் அணி செயலாளர் சந்தர்மோகன், கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் ராமச்சந்திரன் (தோளூர் அணியாபுரம்), நல்லுசாமி (குமரிபாளையம்) மற்றும் விவசாயிகள், மக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.