தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு விவகாரம் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் லட்சக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், சினிமா நட்சத்திரங்கள், வணிகர் சங்கத்தினர், தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஆளுங்கட்சியை தவிர அனைத்து கட்சி சங்கத்தினரும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தண்டையார்பேட்டை போக்குவரத்து பணிமனை அருகே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்த பணிமனையில் இருந்து பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதேபோல் அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, அயனவாரம், வியாசர்பாடி, எம்கேபி நகர், மாதவரம், திருவொற்றியூர், திருவான்மியூர் உள்பட அனைத்து போக்குவரத்து பணிமனைகளில் உள்ள அனைத்து கட்சி சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வணிகர்கள் சார்பில் கடை அடைப்பு போராட்டமும் இன்று நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
