போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தோல்வி என அமைச்சர் விஜயபாஸ்கர் பச்சை பொய் கூறுகிறார் என சி.ஐ.டி.யு மாநில தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் போக்குவத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொழிலாளர்களுடன் 5 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் நேற்று  முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், பேசிய அமைச்சர் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தோல்வி என பேட்டியளித்தார்.

தொடர்ந்து தொழிற்சங்கங்கள் இடையேயான பேச்சுவார்த்தை கோடம்பாக்கத்தில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சி.ஐ.டி.யு மாநில தலைவர் சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தோல்வி என அமைச்சர் விஜயபாஸ்கர் பச்சை பொய் கூறுகிறார்.

அரசு தரும் சலுகைகளால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய வேண்டும்.

தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்த பணத்தை திருப்பி தர வேண்டும்.

ஒய்வு பெற்ற ஊழியருக்கு தரவேண்டிய பாக்கி தொகை 1,800 கோடி ரூபாயை தர வேண்டும்.

பணியில் உள்ள ஊழியர்களுக்கு 4,500 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

தொழிலாளர்கள் பணத்தை அரசு மோசடி செய்து விட்டது.

போக்குவரத்து தொழிலாளர்களை அணுகும் முறையில் ஜெயலலிதா ஆட்சிக்கும் எடப்பாடி ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

மக்களின் உயிரோடு அரசாங்கம் விளையாடி கொண்டு இருக்கிறது.

போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட வேண்டும்.

தொழிலாளர்களை அழைத்து பேசி விரைவில் தீர்வு காண வேண்டும்.

அரசு எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் வரத் தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.