ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுட்டுக்கொன்ற முனிசேகர் உட்பட 5 பேரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி டிகே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க தமிழக காவல்துறையினர் ராஜஸ்தான் சென்ற போது, சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டு கொல்லப்பட்டார். 

கொள்ளையன் நாதுராமை பிடிக்கச் சென்ற இடத்தில் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில்பெரியபாண்டியனின் துப்பாக்கியாலேயே அவர் சுடப்பட்டதாகவும் கொள்ளையன் நாதுராம் தான் சுட்டதாகவும் முதலில் தகவல்கள் வெளியாகின. 

ஆனால் இதையடுத்து ராஜஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பெரியபாண்டியனுடன்  வந்திருந்த ஆய்வாளர் முனிசேகர் தான் பெரியபாண்டியனை தவறுதலாக சுட்டுவிட்டதாக தெரியவந்தது. 

இது தொடர்பாக சென்னையிலும் முனிசேகர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுடப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஆய்வாளர் முனிசேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

முனிசேகர் சென்னை கொளத்தூரில் இருந்து தெற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார். முனிசேகர் உள்ளிட்ட 5 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.