திடீர் சூறாவளி காற்று.. 14 அடிக்கு பொங்கி எழுந்த ராட்சத அலை.. கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை..
கன்னியாகுமரியில் இன்று கடல் பயங்கர சீற்றமாக காணப்பட்டதால், சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இன்று காலை 11மணி முதலே கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும் கரையை நோக்கி சூறாவளி வீசியது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்தது. ராட்சத அலைகள் எழுந்து கரையில் பாறைகள் மீது மோதி சிதறியப்படி இருந்தது. இதனையடுத்து , கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். தொடர்ந்து, ராட்சத அலைகளால் கடலில் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர், பொதுமக்களை கடலுக்கு அருகில் செல்லவிடாமல் தடுத்தனர். மேலும் கடலில் குளிக்க சென்ற பொதுமக்களை, எச்சரித்து திருப்பி அனுப்பினர். மேலும் கடலில் குளித்துக்கொண்டிருந்த மக்களை உடனடியாக வெளியேற்றினர். இதே போல கோவளம், சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம், சொத்தவிளை, வட்டக்கோட்டை பீச், ராஜகமங்கலம் துறை போன்ற இடங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
மேலும் படிக்க:எஸ்.ஐ எழுத்து தேர்வு.. 444 இடங்களுக்கு 2.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்..முதல்முறையாக தமிழ் மொழி தகுதித்தேர்வு
இதனால் இந்த பகுதிகளில் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலட்சத்தீவு பகுதி, கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் 2004- ல் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு, கடலில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டே தான் இருக்கின்றன. குறிப்பாக கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு ,கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடல் நிறம் மாறுவது, கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சி அளிப்பது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:தமிழகத்தில் இன்று கனமழை.. அடித்து ஊற்றப்போகும் மாவட்டங்கள்.. வானிலைஅப்டேட்