காஞ்சிபுரம்

இருளர்கள் கொண்டாடும் மாசி திருவிழா மாமல்லபுரம் கடற்கரையில் இன்று கொண்டாடப்படுகிறது. சுப நிகழ்ச்சிக் குடில்களை அமைத்துள்ளதால் மாமல்லபுரம் கடற்கரை களைகட்டுகிறது.

மாசி மாதத்தில் முருகன், வள்ளி திருமணம் நடைபெற்றதைக் கொண்டாடும் வகையில் இருளர் சமூகத்தினர் மாசி திருவிழாவை வருடந்தோறும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இதற்காக, மாசி மாதம் பெளர்ணமி நாளில், மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் சமூகத்தினர் ஒன்று திரண்டு, குடில்கள் அமைத்து, ஆடல் பாடலுடன் திருமணம் நிச்சயம் செய்தல், நிச்சயித்த திருமணத்தை நடத்தி வைத்தல் போன்ற சுப நிகழ்ச்சிகளில் ஈடுபடுவர்.

இந்த வருடம் மார்ச்-1 (அதாவது இன்று) இரவு மாசி திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவே இருளர்கள் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்து குடில்களை அமைத்து தங்கி உள்ளனர்.

இருளர் திருவிழாவுக்காக பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்து கடைகள் வைத்துள்ளனர். இந்த விழாவையொட்டி கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது, இதனால், நேற்று காலை முதல் மாமல்லபுரம் பேருந்து நிலையம் தற்காலிகமாக புறவழிச்சாலையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், கடைவீதிகளையும், இருளர்களின் குடில்களையும் கண்டு ஆர்வத்துடன் தங்கள் செல்போனில் படம் எடுத்து களி கூர்ந்தனர்.