today also rain in chennai people happay

சென்னையில் நேற்று திடீரென பெய்தத கனமழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்தது. இதனால் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் சென்னையில் இன்றும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர

சென்னையில் நேற்று காலை வெயிலின் உக்கிரம் சற்று அதிகமாக இருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 102.2 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 104.18 டிகிரியும் வெயில் கொளுத்தியது.
ஆனால் பிற்பகலில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. கருமேகங்கள் சூழ்ந்தன. மதியம் 2 மணியளவில் முதலில் லேசாக தொடங்கிய மழை பின்னர் அது கனமழையாக மாறி கொட்டித் தீர்த்தது.

சென்னை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், மேடவாக்கம், ஊரப்பாக்கம் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

கன மழையால் பெரும்பாலான சாலைகளில் 2 அடி உயரத்தில் தண்ணீர் ஓடியது. அந்த சாலையில் வாகனங்கள் தத்தளித்தப்படி ஊர்ந்து சென்றன. சில வாகனங்களின் என்ஜீனுக்குள் தண்ணீர் புகுந்ததால், வாகன ஓட்டிகள் அந்த வாகனங்களை தள்ளியபடி சென்றதை காண முடிந்தது. கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாழ்வான குடியிருப்பு பகுதிகள், தெருக்களையும் மழைநீர் குளம் போன்று சூழ்ந்தது. கோடை வெயில் காலமா? அல்லது பருவமழை காலமா? என்று எண்ணும் அளவுக்கு சென்னை நகரின் வானிலை மாறி இருந்தது.



சென்னை நகரில் திடீரென பெய்த மழை பூமியை குளிர்வித்து, வெப்பம் தணித்ததால் பொதுமக்கள் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள, காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்பதால், சென்னை உள்ளிட்ட, வடக்கு கடலோர மாவட்டங்களில், சில இடங்களில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் இன்றும் மழை கொட்டித் தீர்க்கும் என எதிர்பாக்கப்படுகிறது..