கிருஷ்ணகிரி

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பேரூராட்சிக்கு சொந்தமான திருமணக் கூடத்தை திறக்க  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று பேரூராட்சியும், அறக்கட்டளையின் நிர்வாக  குழுவும்  இணைந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சிக்குச் சொந்தமான சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக  தனியார் நிர்வாகத்திடம் இருந்து வந்தது.

கடந்த 2013 -2014-ஆம் ஆண்டு பேரூராட்சிக்குச் சொந்தமான திருமணக் கூடத்தை கையகப்படுத்துதல் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,  2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  திருமணக்கூடத்தை பேரூராட்சி வசம் ஒப்படைக்கக் கோரி தனியார் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தனியார் அமைப்பினர், "திருமணக் கூடம் தங்களுக்குச் சொந்தம்" என உரிமைக் கோரி ஊத்தங்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையில்,  "தனியார் மூவர் கொண்ட குழுவுக்கு சொந்தம் என்பதற்கான ஆவணங்கள், முகாந்திரம் இல்லை" எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இதனையடுத்து தனியார் பயன்பாட்டில் இருந்துவந்த திருமணக் கூடத்தை டி.எஸ்.பி அர்ச்சுனன் தலைமையிலான காவலர்கள், வட்டாட்சியர் சுப்பிரமணியம், பேரூராட்சி செயல் அலுவலர் சாம்ராஜ் மற்றும் நிர்வாகத்தினர் முன்னிலையில் திருமணக் கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டு,  "பேரூராட்சிக்குச் சொந்தம்" என்று கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதையடுத்து பேரூராட்சியும், புதிதாக நிறுவப்படும் அறக்கட்டளையின் நிர்வாக  குழுவும்  இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடைப்பெற்றது.

இந்த ஆலோனை கூட்டத்துக்கு வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள் பூபதி, ஜெயலட்சுமி, அதிமுக ஒன்றியச் செயலர் எ.சி.தேவேந்திரன், நகரச் செயலர் சிவானந்தம், திமுக நகரச் செயலர் பாபு சிவக்குமார், கல்லூரி முதல்வர்  க.அருள்,  

தணிகை கருணாநிதி, பழ.பிரபு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு அறக்கட்டளை நிர்வாகிகள்  மற்றும் ஊத்தங்கரையில்  உள்ள முக்கிய  பிரமுகர்கள், பொதுமக்கள் என திரளாக பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் "மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திருமணக் கூடத்தை திறக்க  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க  வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.