சேலம்

வழக்குரைஞர்கள் தங்களது பிரச்சனைகளுக்காக நீதிமன்றத்தை புறக்கணிப்பதை தவிர்க்க வேண்டும். என்று  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் வேண்டுகோள் விடுத்தார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது.

இந்த விழாவில் நீதிபதி பி.கலையரசன் கலந்து கொண்டு பேசியது: "ஏழை, எளியோருக்கு எட்டாக்கனியாக இருந்த நிலை மாறி தற்போது வீட்டு வாசலைத் தட்டி நீதி வழங்கப்பட்டு வருகிறது.  வட்டங்கள்தோறும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். வாழப்பாடியில் புதிய நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு கட்டடம்  அமைக்கவும் சட்டத் துறை அமைச்சர் வழிவகை செய்திட வேண்டும்.

சங்க இலக்கியங்களிலேயே தமிழகத்தில் நீதித்துறை உருவாகிவிட்டது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர் நீதி குறித்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கன்றுவை இழந்த பசுவுக்காக மனுநீதிச்சோழன் தனது மகனை தேர்ச்சக்கரத்தில் ஏற்றி நீதியை நிலைநாட்டினான். தமிழகத்தில் தகுந்த ஆதாரத்தைக் காட்டி வாதிட்ட முதல் பெண் வழக்குரைஞராக கண்ணகியும், தீர்ப்பு தவறியதால் உயிர்விட்ட முதல் நீதிபதியாக பாண்டிய மன்னரும் திகழ்ந்ததை இலக்கியங்களில் அறிய முடிகிறது.

மக்கள் அமைதியாக வாழ்ந்திட பாரபட்சமற்ற நீதி கிடைக்க வேண்டும். 100-ல் 25 சதவீத வழக்குகள் காலதாமதத்தால் தீர்க்கப்படாமல் உள்ளன. வழக்குரைஞர்கள், பிரச்சனைகளுக்காக நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வதைத் தவிர்க்க வேண்டும். காலதாமதம் செய்யாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்" என்று அவர் பேசினார்.

இந்த விழாவில், தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்க உறுப்பினர் பி.பரமசிவம்,  சேலம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜி.பொன்னுசாமி,  செயலர் ஆர்.ஐயப்பமணி,  வாழப்பாடி வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் வி.ஏ.சரவணன்,  ஆர்.திரவியம், பி.சண்முகநாதன், மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர். இளங்கோவன், கள்ளக்குறிச்சி  மக்களவை தொகுதி உறுப்பினர் கே.காமராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள்  சித்ரா,   சின்னத்தம்பி,  மனோன்மணி,  மருதமுத்து, வாழப்பாடி நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்தோஷம்,  மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழாவின் இறுதியில் சேலம் விரைவு நீதிமன்ற முதன்மை நீதிபதி பி.சிவஞானம் நன்றித் தெரிவித்தார்.