தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி மெரினா உட்பட பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்தை கண்டு மிரண்டு போன சந்திரபாபு நாயுடு தனது மாநிலத்தில் இதேபோல் கூடிய இளைஞர்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என, அம்மாநில மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் நடத்திய அமைதி போராட்டத்தை போல், குடியரசு தினமான நேற்று, விசாகப்பட்டினம் கடற்கரையில் அமைதி பேரணி நடத்த, அந்த மாநில இளைஞர்கள் திட்டமிட்டனர்.

சென்னை போராட்டம் போலவே இந்த பேரணியில் பங்கேற்குமாறு, 'பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்' மூலம் தகவல் அனுப்பப்பட்டது. இந்த பேரணிக்கு ஆதரவாக நடிகர்கள் பலரும், கருத்து பதிவிட்டதுடன், தாங்களும் அதில் பங்கேற்கப் போவதாக அறிவித்தனர்.
ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான, ஜெகன் மோகன் ரெட்டியும், இளைஞர்களின் பேரணிக்கு ஆதரவு தெரிவித்தார். சென்னையை போல் சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவர்கள் திரண்டால் அது சென்னை போராட்டம் போல் அரசுக்கு சிக்கலை தந்துவிடும் என்று பயந்து போன ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேரணிக்கு தடை விதித்தார்.

பெற்றோர் யாரும், தங்கள் பிள்ளைகளை பேரணிக்கு அனுப்ப வேண்டாம் எண்ரு கேட்டுகொண்டார். அப்படியும் , தடையை மீறி நடிகர் சம்பூர்னேஸ் பாபு தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விசாகப்பட்டினம் ராமகிருஷ்ணா கடற்கரையில் குவிந்தனர்.
இதையடுத்து, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சென்னை மெரினா மாணவர் போராட்டம் தமிழகம் தாண்டி மற்ற மாநில முதல்வர்களுக்கும் பாடமாக அமைந்துள்ளதற்கு இது சிறந்த உதாரணம் ஆகும்.
