தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்று இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்பத்தூர், ஈரோடு, வேலூர் புதியதாக உருவாக்கப்பட்ட ஆவடி, கும்பகோணம், கடலூர், தாம்பரம் என 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில் ஆளும் கட்சியான திமுக மூன்றாம் பாலினத்தவரான கங்கா என்பவரை வேட்பாளராக நிறுத்தியது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் திமுக சார்பில் களம் காணும் முதல் திருநங்கை இவர் என குறிப்பிடத்தக்கது. வேலூர் மாநகராட்சியில் ஆளும் கட்சியான திமுக-வில் போட்டியிட கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தநிலையில் திருநங்கை ஒருவருக்கு சீட் வழங்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், வேலூர் மாநகராட்சியின் 37-வது வார்டில் போட்டியிட்ட திருநங்கை கங்கா 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரின் வெற்றிக்கு அப்பகுதி மக்கள், சக திருநங்கைகள் என பலதரப்பட்டோர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து கங்கா இந்தியாவின் முதல் திருநங்கை கவுன்சிலராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
