Asianet News TamilAsianet News Tamil

மிதக்கும் தென் மாவட்டங்கள்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்

TN Southern districts rain MK Stalin advice to dmk cadres to help public and relief work smp
Author
First Published Dec 18, 2023, 11:16 AM IST | Last Updated Dec 18, 2023, 11:16 AM IST

சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டி போட்ட நிலையில், தென் மாவட்டங்களை கனமழை மிரட்டி வருகிறது. தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை, நேற்று இரவு வரை நீடித்தது. தற்போது கனமழை பெய்து வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது தூத்துக்குடி மாவட்டத்தின் ஒராண்டு சராசரி மழை அளவைவிடவும் மிக மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாயினர். சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் தேவைக்கு ஏற்ப இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், மாவட்ட நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

இதனிடையே, தென் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழையும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல் அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் - நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன்.” என பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios