ஆவணங்களை திருத்த முடியாது... நவீன டெக்னாலஜி - பதிவுத்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் தொழில்நுட்ப துறை மூலம் உருவாக்கப்பட்ட நம்பிக்கை இணையம் வாயிலாக ஆவணங்களை மாற்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது

TN Registration Department Order to use block chain for not to change in documents

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை பதிவுத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பதிவு செய்யப்பட்ட சொத்து உள்ளிட்ட ஆவணங்களை திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென அனைத்து சாா் பதிவாளா்களுக்கும் பதிவுத்துறை தலைவா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கை இணையம் (பிளாக் செயின்) என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட சொத்து, திருமணப் பதிவு உள்ளிட்ட அனைத்து வகையான ஆவணங்களை திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூ.1000 மகளிர் உரிமை தொகை: தமிழக அரசு எடுத்த சர்வே... ரேஷன் கார்டு கிடைப்பதில் சிக்கல்?

இந்த தொழில் நுட்பமானது மின்னணு மயமாக்கப்பட்ட ஆவணங்களை முத்திரையிடுவதை(time stamp) நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால் இதனை முன் தேதியிட்டு மாற்றவோ அல்லது திருத்தவோ இயலாது. இதற்காக, 'நம்பிக்கை இணையம்' என்ற பெயரில் புதிய முத்திரை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, பத்திரங்களின் நகல் கோரி பொது மக்கள் விண்ணப்பித்தால், சான்றிட்ட நகலின் இடது ஓரத்தில் 'நம்பிக்கை இணையம்' முத்திரையிடப்படும். அந்த குறிப்பிட்ட ஆவணம், முறையாக சரிபார்க்கப்பட்டது, திருத்த இயலாது என்பதற்கான அடையாளமாக இந்த முத்திரை அமையும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிவருடல் செய்யப்பட்ட ஆவணங்களின் ஒரு பகுதியை (file hashes) தனியாக பிரித்து எடுத்து சேமித்து வைப்பதன் மூலம் ஆவணங்களின் மெய்த்தன்மை எக்காலத்திலும் உறுதிசெய்யப்படும் எனவும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

“நம்பிக்கை இணையத் திட்டமானது, பதிவுத் துறையில் கடந்த 13ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த மே 1ஆம் தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்திலும் நம்பிக்கை இணையம் (பிளாக் செயின்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக ஒரு ஆவணம் பதிவு செய்யப்பட்டு ஒளிவருடல் செய்யப்பட்டவுடன், அந்த ஆவணத்தில் நம்பிக்கை இணையம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மே 1-ஆம் தேதிக்கு முன்பாக ஒளிவருடல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களிலும் நம்பிக்கை இணையம் ஏற்படுத்தப்படும்.” எனவும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபரங்களை ஆவண எழுத்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு, சார் பதிவாளர்கள் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios