ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை விடுவிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை  பெற்ற ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் , தாங்கள் இருவரும் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து விட்டோம் என்றும் தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஏற்கனவே இந்த வழக்கில் 2005 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ராபர் பயஸ் , ஜெயகுமார் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு கடந்த 2012 ஆம் ஆண்டு, உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபாலன் பெயரில், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அவர்களை விடுவிக்க முடியாது  என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 2012 ஆம் ஆண்டு ராஜகோபால் தாக்கல் செய்த அதே மனுவை தமிழக அரசு மீண்டும் தாக்கல் செய்துள்ளது.

அதில் ராபர்ட்  பயஸ், ஜெயகுமார் ஆகியோரை விடுவிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நன்னடத்தை பரிந்துரை குழு அவர்கள் இருவரையும் விடுவிக்க பரிந்துரைக்கவில்லை என்றும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.