ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறுவோருக்கான மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் தரவுத்தளத்தில் இருந்து விவரங்கள் எடுக்கப்பட்டு ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை அளிக்கப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால், ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ காப்பீடு அடையாள அட்டையில் புகைப்படம் இல்லாமல் இருந்தது. இதனால், முறைகேடுகள் நடக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், ஓய்வூதியம் பெறுவோரின் புகைப்படத்துடன், துணைவரின் புகைப்படத்தையும், ஒட்டி புதிதாக அவர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்கங்கள் சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு விரைவில் புதிய தலைவர்? ரேஸில் யார்?

அதன் தொடர்ச்சியாக, ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை அளிப்பதற்கான படிவங்கள் ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட அந்த படிவங்கள் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தின் பதிவேற்றம் செய்யப்படும். அதன்பிறகு, பயனாளிகள் தங்களுக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் வாழ்வுச் சான்றிதழை அளிப்பதற்கு கருவூல அலுவலகங்களுக்கு ஓய்வூதியதாரர்கள் நேரில் செல்ல வேண்டும். அப்போது, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இதற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இந்தப் படிவங்களின் அடிப்படையில் அடையாள அட்டையில் ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் திருத்தப்பட்டு புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.