தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில், சிறந்த தமிழ் உச்சரிப்பாளர்களுக்கான விருதுகள் சென்னையில் வழங்கப்பட்டன. நான்கு ஊடகவியலாளர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் உச்சரிப்பாளர் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நான்கு ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின் போது, ஊடகங்களில் தமிழ்ச் செய்திகளைப் பிழையில்லாமலும், சரியான உச்சரிப்புடனும் வழங்குபவர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் நான்கு பேருக்கு தலா ரூ. 25,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Scroll to load tweet…

விருதுக்கான தேர்வு முறை

இந்த விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய, ஊடக நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்கள், "நா பிறழ் தொடர்களை" (tongue twisters) உச்சரித்து, அதனைக் காணொலியாகப் பதிவு செய்து சமர்ப்பித்தனர். இந்த வீடியோக்கள் தேர்வு குழுவின் முன் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விருது பெற்றவர்கள்

2023-2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் உச்சரிப்பாளர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு ஊடகவியலாளர்கள்:

முனைவர் வா.கி. சர்வோதய இராமலிங்கம்

திருமதி வேதவள்ளி செகதீசன்

திருமதி ஜோ. அருணோதய சொர்ணமேரி

திரு. ப. மோகன்ராஜ்

விருது வழங்கும் விழா

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செப்டம்பர் 8, 2025) நடைபெற்ற விழாவில் விருதுகளை வழங்கினார். விருது பெற்ற நால்வருக்கும் தலா ரூ. 25,000 பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் உள்ளிட்ட உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.