பொங்கலுக்கு வேட்டி, சேலை: நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
பொங்கலுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்துக்கு உற்பத்தி அனுமதி மற்றும் முன்பணமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தமிழர்களால் ஜனவரி மாதம் 14ஆம் தேதி கோலகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி சேலை விநியோகம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 2024 பொங்கல் பண்டிகைக்கு பொங்கலுக்கு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலை திட்டத்துக்கு உற்பத்தி அனுமதி மற்றும் முன்பணமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, விலையில்லா வேட்டி, சேலை திட்டத்துக்கு உத்தேச உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்டி, சேலலையை விநியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய்த் துறை தலைமையில் கூடுதல் தலைமை செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை செயல்படுத்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆணையர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் வேட்டி, சேலைகளை வழங்கும் போது விரல் ரேகை பதிவு கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1983 முதல் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு தேவையான வேட்டி, சேலைகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.