TN farmers protest in delhi

விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 31 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று 4-வது முறையாக தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து பேசினார். 

அப்போது உடனே போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் மத்திய நிதி அமைச்சர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அய்யாக்கண்ணு திட்டவட்டமாக அறிவித்து போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.

எலிக்கறி, பாம்புக்கறி, மண்சோறு சாப்பிட்டு போராட்டம், மொட்டை அடித்து போராட்டம், நிர்வாண போராட்டம் என தினமும் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் அனைவரும் நடுரோட்டில் குட்டிக்கரணம் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் எங்களை எல்லாம் சந்தித்து எங்கள் கோரிக்கைகள் குறித்து பேசுவார் என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.