TN budget today

கடும் கடன் சுமையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல்…புதிய வரிகள் விதிக்கப்படுமா?

ஜெயலலிதா இல்லாத அதிமுக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசின் 2017-18 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஜெயகுமார் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்கிறார்.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு இலவச திட்டங்களால் ஏற்கனவே கடும் நிதி சுமையில் அரசு சிக்கித் தவித்து வருகிறது. மேலும் தமிழக அரசின் வருவாயும் பெருமளவு குறைந்துள்ளது.

ஏற்கனவே தமிழக அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களுக்கு, நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் கடனும், ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல் அதற்கான வட்டித் தொகையும் கூடிக் கொண்டே வருகிறது.


ஜெயலலிதா மறைவுக்கு முன்பு கடந்த ஆண்டு வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.எனவே, இம்முறையும் வரி இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா அல்லது புதிய வரிகள் விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் தமிழக அரசு பெட்ரோல்,டீசலுக்கு வரி விதித்ததில் கணிசமான வருவாய் கிடைத்தாலும், பட்ஜெட்டுக்கு தேவையான நிதி கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

கடுமையான இந்த சூழ்நிலையில், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட், இன்று காலை, 10:30 மணிக்கு, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின், முதன் முறையாக, இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோல், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயகுமாருக்கும், இதுவே முதல் பட்ஜெட்.

இந்த பட்ஜெட் தாக்கலின் போது, தி.மு.க எம்எல்ஏ க்கள் , சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதால், இன்றைய சட்டப் பேரவை பரபரப்பாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.