TN assembly meeting on june 14th
கடந்த ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் 2017க்கான சட்டமன்ற தொடங்கியது. இதைதொடர்ந்து மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து துறைகளுக்கான பட்ஜெட் குறிப்புகளை அமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்தார்.
பின்னர், ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலையொட்டி மானிய கோரிக்கை மீதான விவாதம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின், சட்டப்பேரவை கூடவில்லை.
இதை தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை கூட்டம் நடத்தி, மானிய கோரிக்கை விவாதம் நடத்த வேண்டும் என கவர்னர், சபாநாயகர் உள்பட அனைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

இந்நிலையில், வரும் 14ம் தேதி சட்டப்பேரவை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். மேலும் தொகுதி வாரியன சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக விவசாயிகள் போராட்டம், குடிநீர் பிரச்சனை, மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காததை கண்டித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும், ஜூலை 1ம் தேதியில் இருந்து அமலில் வர உள்ள ஜிஎஸ்டி மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, உணவு பொருட்களுக்கு அதிக வரி விதித்ததாக ஓட்டல் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அதேபோல், ஜிஎஸ்டி வரியால் சினிமா துறையில் பாதிப்பு ஏற்படும் என திரைத்துறையினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இத்தனை எதிர்ப்புகளை மீறி ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்படும்போது, சட்டப்பேரவையில் அமளி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இதனால், வரும் 14ம் தேதி கூட்டப்படும் சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா குறித்த விவாதம் அதிகளவில் இருக்கும். மேலும், இந்த சட்டப்பேரவை எத்தனை நடக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
