அரியலூர்

அரியலூரில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவராணத் தொகை வழங்க கோரி, கையில் திருவோடும், விச பாட்டிலும், கழுத்தில் தூக்குக் கயிறும் மாட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆடு, மாடுகளுடன் அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கூடினர்.

அவர்கள் திருவோடு ஏந்திக் கொண்டும், விச பாட்டிலுடன், கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஐயாக்கண்ணு தலைமை தாங்கினார்.

மக்கள் சேவை இயக்க அகில இந்திய தலைவர் தங்க சண்முகசுந்தரம், பேரியக்கத்துக்கு எதிரான பேரியக்க மாநில தலைவர் லெனின், மக்கள் சேவை இயக்க செயலாளர் சரவணன் ஆகியோர் பேசினர்.

மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பஞ்சநாத கணபதி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, மாநில நிர்வாகி உதயகுமார் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின்போது, “வரலாறு காணாத வறட்சியால் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு அவர்களுக்கான நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், கரும்புக்கு ரூ.50 ஆயிரமும், வாழைக்கு ரூ.1 இலட்சமும், அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு அடுத்த விவசாய பணிகள் கிடைக்கும் வரை ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்” போன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவற்றைக் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.