வேதாரண்யம்,
கோடியக்கரை அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களை, இலங்கை மீனவர்கள் கட்டையால் தாக்கிவிட்டு, ரூ.8 இலட்சம் மதிப்புள்ள மீன்கள், வலைகளையும் பறித்துச் சென்றனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மற்றும் மீனவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு 31 தமிழக மீனவர்கள் அந்த நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள 130-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை தாக்கி மீன்கள் மற்றும் வலைகளை இலங்கை மீனவர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் இங்குவந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி பகுதி பெருமாள்பேட்டையை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் பைபர் படகில் நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் (36), கார்த்திகேயன் (28), குருமூர்த்தி (20), பிரசாத் (23), விவேக் (20) ஆகிய ஐந்து பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதேபோல் பெருமாள்பேட்டையைச் சேர்ந்த சின்னையன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சின்னையன் (52), அவரது மகன் விவேக் (20), ரவிச்சந்திரன் (40), பழனிசாமி (60) ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் ஒன்பது பேரும் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 10 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், நாகை மீனவர்களின் 2 படகுகளையும் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் நாகை மீனவர்களை கட்டையால் கடுமையாக தாக்கினர்.
மேலும் 2 படகுகளில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள், திசைகாட்டும் கருவி, செல்போன் மற்றும் படகில் இருந்த உபகரணங்களையும் அள்ளிக்கொண்டு, தாங்கள் வந்த படகில் தப்பி சென்றுவிட்டனர்.
இலங்கை மீனவர்கள் பறித்துச்சென்ற வலைகள், மீன்களின் மதிப்பு ரூ.8 இலட்சம் இருக்கும்.
நேற்று அதிகாலை 2 படகுகளிலும் 9 மீனவர்கள் கோடியக்கரைக்கு திரும்பி வந்தனர். பின்னர் அவர்கள் கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
அதன் பேரில் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை மீன்வர்களை, இலங்கை மீனவர்கள் கட்டையால் தாக்கியது கோடியக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
