Three rural roads that were destroyed by sand lorries The struggle to send children to school

கடலூர்

மணல் அள்ளிச் செல்லும் லாரிகளால் மூன்று கிராமத்து சாலை படுமோசமாக பாழானதால் மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலை அடுத்த குமராட்சி அருகே உள்ள இளங்கம்பூர், வெள்ளூர், வாண்டையார் இருப்பு ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு மணல் குவாரி திறக்கப்பட்டது.

இங்கிருந்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இந்த மூன்று கிராமங்களின் வழியாக தினமும் 200–க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருவதால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன.

சாலைகள் பெருத்த சேதமடைந்ததால் அந்தப் பகுதிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தும் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் மக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதனையடுத்து பழுதானச் சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், அந்த வழியாக செல்லும் மணல் லாரிகளை மாற்றுப் பாதையில் இயக்கக் கோரியும் மூன்று கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இது தொடர்புடைய துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர்.

ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சினம் கொண்ட மூன்று கிராம மக்களும் நேற்று காலையில் ஒன்று திரண்டு, இரண்டு கிராமங்கள் வழியாக மணல் ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பிடித்து, சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்த தகவலின்பேரில் குமராட்சி காவலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள், “மணல் லாரிகளால் மூன்று கிராமங்களின் சாலை படுமோசமாகி விட்டது. லாரிகள் அதிவேகமாக செல்வதால் விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மணல் லாரிகள் செல்ல மாற்றுப்பாதை அமைக்க வேண்டும்” என்றனர்.

அதற்கு அதிகாரிகள், “இது தொடர்பாக உயரதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

இதனையடுத்து போராட்டத்தைக்க் கைவிட்டு கிராம மக்கள் கலைந்துச் சென்றனர்.

இதனிடையில் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக, வெள்ளூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்று வரும் தங்களது குழந்தைகளை நேற்று பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் மூன்று கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ, மாணவிகளின்றி பள்ளிக்கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.