Asianet News TamilAsianet News Tamil

கமிஷனுக்கு பழைய நோட்டுகளை மாற்றிக் கொடுத்த மூவர் கைது…

three arrested-for-the-commission-given-to-change-old-n
Author
First Published Dec 23, 2016, 9:28 AM IST


எர்ணாகுளம்,

கமிஷனுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்த மூவர் கைது. அவர்களிடமிருந்த ரூ.37 இலட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை, எர்ணாகுளம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர், கமிஷன் பெற்றுக் கொண்டு வழங்கி வந்துள்ளனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. மேலும் பணத்தை தங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இரகசியமாக விரைந்துச் சென்ற அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு வீட்டில் 37 இலட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த வீட்டில் இருந்த மூன்று பேரைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில், அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், கமிஷன் பெற்றுக் கொண்டு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதற்காக அந்த பணத்தை வைத்திருந்ததும் உறுதியானது.

அதன்பிறகு, அந்த மூன்று பேரையும் அதிகாரிகள் கைது செய்து, அங்கிருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், “புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை பிடித்துள்ளோம்.

“அவர்களுக்கு யாரிடமிருந்து அந்த பணம் கிடைத்தது. பழைய ரூபாய் நோட்டுகளை அவர்கள் யாரிடம் கொடுக்கின்றனர். இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.

விசாரணை முடியும் வரை கைதானவர்களின் பெயர் விவரங்களை வெளியிட இயலாது” என்றுத் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios