threaten to the pair who marriage refuse Caste complained request for protection
திருப்பூர்
சாதி மறுப்பு திருமணம் செய்ததால் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாகவும், தங்களது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் திருப்பூர் காவல் கண்காணிப்பளர் அலுவலகத்தில் கணவன், மகளுடன் வந்து பெண் புகார் கொடுத்தார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் முள்ளிபுரம் காலனியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (22). இவர் தனது கணவர் கதிரேசன் (25), மகள் நிஷாந்தினியுடன் (2) நேற்று காலை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
காவல் கண்காணிப்பாளர் கயல்விழி வெளியூர் சென்றிருந்ததால் அங்கிருந்த காவல் அதிகாரிகளிடம் ரஞ்சிதா மனு கொடுத்தார். அந்த மனுவில், "கடந்த 2015-ஆம் ஆண்டு நானும், கதிரேசனும் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு இரண்டு வயதில் மகள் உள்ளாள்.
விவசாய கூலி வேலை செய்து, முள்ளிபுரம் காலனியில் குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த ஜானகி, விஜய், சென்னியப்பன் ஆகியோர் சேர்ந்து எங்களை அந்தப் பகுதியில் குடியிருக்க கூடாது என்று மிரட்டி வருகின்றனர்.
அவர்கள் கடந்த 25-ஆம் தேதி எனது வீட்டுக்குள் புகுந்து எனது கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். என்னையும், என் கணவரையும் அடித்தனர். இதில் காயமடைந்த எனது கணவர் காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காங்கேயம் காவலாளர்களிடம் இது தொடர்பாக புகார் கொடுத்தோம். ஆனால், அந்த புகாரை ஏற்க மறுத்ததுடன் பொய் புகார் என்று கூறினார்கள். அன்று இரவு மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து சென்னியப்பன் உள்ளிட்டவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது காங்கேயம் காவல் உதவி ஆய்வாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். நாங்கள் தெரிவித்த புகாரை அவர் ஏற்கவில்லை. எனக்கும், எனது குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் புகாரை விசாரிக்க வேறு காவல் அதிகாரியை நியமிக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.
அந்த மனுவை பெற்றுக்கொண்ட காவல் அதிகாரிகள், இதுதொடர்பாக வேறு காவல் அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தப்படுமென்று என்று தெரிவித்தனர்.
