கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு இந்த முறை ஜெர்மன் நாட்டுத் தொழில்நுட்பத்தில் ரசாயன கலவை பூசப்படுகிறது. இந்த ரசாயனக் கலவையால் திருவள்ளுவர் சிலை 15 ஆண்டுகள் உப்புக் காற்றால் சேதம் அடையாது என்று சொல்கிறார்கள்.

கன்னியாகுமரியில் கடல் நடுவே பாறையில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.

எந்தநாட்டுச் சுற்றுலாப் பயணியாக இருந்தாலும், கன்னியாகுமரிக்கு வந்தால் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்க்கத் தவறியதில்லை. அவ்வளவு புகழ் பெற்றது.

இந்தச் சிலை உப்பு காற்றால் சேதமடையாமல் இருக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலையின் மீது இரசாயனக் கலவை பூசப்படுவது இயல்பே.

அதன்படி திருவள்ளுவர் சிலைக்கு இரசாயனக் கலவை பூச மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த முறை ஜெர்மன் நாட்டின் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய இரசாயனம் பூசப்பட இருக்கிறது. இதன்மூலம் சுமார் 15 ஆண்டுகள் வரை சிலைக்கு உப்பு காற்றால் சேதம் ஏற்படாது என்று அரசு அலுவர்கள் சொல்கிறார்கள்.

இதற்காக தமிழக அரசு ஒரு கோடியே 17 இலட்சம் ரூபாய் ஒதுக்கிட்டு உள்ளது. நிதி ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து டெண்டர் கோரப்பட்டது. இந்தப்பணி குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் உடனடியாக பணியை மேற்கொள்ளவுள்ளார்.

முதற்கட்டமாக சிலையைச் சுற்றி சாரம் கட்டும்பணி வருகிற 15–ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

அதனைத் தொடர்ந்து, மூன்று மாத காலம் இரசாயன கலவை பூசும் பணி நடைபெறும். அதுவரை திருவள்ளுவர் சிலையைச் சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

எனவே, இந்த மூன்று மாதங்களும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படும்.

பணிகள் முடிவடைந்த பின்னர் திருவள்ளூர் சிலை, சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வரும்.