This can only change our area as non accident - Police Superintendent ...
மதுரை
சாலை விதிகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் முறையாக பின்பற்றுவதன் மூலமாக மேலூர் பகுதியை விபத்தில்லா பகுதியாக மாற்ற முடியும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
விரைவான போக்குவரத்திற்காக மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டன. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இதில், பல கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் சாலையை கடக்கும்போது விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பு, உடல் உறுப்பு பாதிப்பு மற்றும் பொருட்சேதம் போன்றவை ஏற்பட்டு பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.
இந்த நிலையில் கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள கருங்காலக்குடி பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்த நாட்களில் இருந்து இதுவரை ஏராளமானவர்கள் விபத்தில் பலியாகி உள்ளனர்.
இதனால் மாணவ - மாணவிகள் பொதுமக்கள் சாலையை கடந்து செல்வது பெரும் சோதனையாக உள்ளது. எனவே, அந்தபகுதி மக்கள் நீண்ட நாட்களாக மேம்பாலம் அமைத்து தரக் கோரிக்கை வைத்து வருகின்றனர்
இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்வீஸ் சாலை கருங்காலக்குடியில் அமைக்கப்பட்டது. ஆனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சர்வீஸ் சாலையில் செல்லாமல், பிரதான சாலையில் சென்று நிறுத்துவதால் மேலும் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.
அதனைத் தொடர்ந்த, " நான்கு வழிச்சாலையில் எந்த வாகனங்களும் நிறுத்த கூடாது, கருங்காலக்குடியில் நிறுத்தும் அனைத்து பேருந்துகளும் சர்வீஸ் சாலையில் சென்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்" என்று காவலாளர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், அங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு காவலாளர்களால் வேகத்தடுப்பு அமைக்கப்பட்டது. இதையடுத்து விபத்துக்கள் குறைந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த கருங்காலக்குடியில் மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
அதில் அவர், "மேலூர் கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிக விபத்துக்கள் நடைபெறுகிறது, விபத்துக்களை தடுக்க கருங்காலக்குடியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க முயற்சி எடுக்கப்படும்.
சாலை விதிகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் முறையாக பின்பற்றுதல் வேண்டும். அதன்மூலமாக இந்த பகுதியை விபத்தில்லா பகுதியாக மாற்ற முடியும்" என்றார்.
இந்தக் கூட்டத்தில் கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் வசந்தி, மேலூர் போக்குவரத்து ஆய்வாளர் கோதண்டம், மோட்டார் வாகன தனிக்கை ஆய்வாளர் விஜய், வியபாரிகள் சங்க தலைவர் கணபதி, வாகன ஓட்டுனர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
